March 28, 2023

BusinessMinutes

Twice a Week

கார் விபத்தில் சிக்கி
உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்றவரை காப்பாற்றிய திருச்சி அப்போலோ மருத்துவர்கள்

திருச்சி, கொடூர கார் விபத்தில் சிக்கி குற்றுயிர் நிலையில் இருந்த இளைஞரைக் காப்பாற்றி அவருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளனர் திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள்.
கடந்த மார்ச் 10-ம் தேதி கார் கவிழ்ந்து சாலை விபத்தில் சிக்குண்டு கடுமையான காயங்களுடன் உயிருக்கு மோசமான நிலையில் 40 வயது விஜயக்குமார் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் வந்துசேரும்போது அவருக்கு சுயநினைவு ஓரளவே இருந்தது. மூச்சு விடுவதற்கும் சிரமப்பட்டார். இரத்த அழுத்தத்திலும் மாறுபாடு இருந்தது. உடலெங்கும் ஏராளமான காயங்கள். விசாரித்ததில், சம்பவ இடத்தில் வாகனத்திலிருந்து கதவு உடைபட்டு வெளியே வீசியெறியப்பட்டிருக்கிறார். வெயில் சூடேறிய தார்ச்சாலையில் கடுமையான சிராய்ப்பினால் தோலிழந்த கை மற்றும் கால்களின் பெரும்பகுதி வெந்துபோயிருந்தது. இடதுத்தொடையும் மிகமோசமாக வீங்கியிருந்தது. இடுப்பையும் கழுத்தையும் அசைக்கமுடியாத நிலையில் இருந்தார்.
முதற்கட்ட சிகிச்சைகளில் சுவாசத்தையும் ரத்த அழுத்தத்தையும் திடப்படுத்திய பிறகு அவருக்கு ஸ்கேன்கள் எடுக்கப்பட்டன. மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர் மயிலன் சின்னப்பன், மரு.பாலசுப்ரமணியன் மற்றும் மரு.அருண்கீதையன் நோயாளிக்கான ஒட்டுமொத்த சிகிச்சையையும் ஒருங்கிணைத்தார். மரு.செந்தூரன் மற்றும் மரு.முரளிரங்கன் கல்லீரல் சார்ந்த சிகிச்சையை முன்னெடுத்தனர். தீக்காயங்களில் கரும்பூஞ்சை வளர்ச்சி கண்டறியப்பட்டது அதற்கான சிகிச்சையை மரு.விதுன்ராஜ் பரத் முன்னெடுத்தார்.
மிக முக்கியமான கழுத்து எலும்பு முறிவு இருக்கும் நிலையில்தான் இத்தனை போராட்டங்களும் நிகழ்கின்றன. கழுத்துத் தண்டின் இரண்டாவது எலும்பு பொடிப்பொடியாக நொறுங்கிப்போயிருந்தது. தீவிர சிகிச்சைமருத்துவர் அணியிலிருந்த மரு.பரணிதரன், மரு.விக்னேஷ், மரு.முத்துவெங்கடேஷ், மரு.குமார், சிறுநீரகப்பிரிவு மருத்துவர் பாலமுருகன், கிருமித் தொற்று சிகிச்சை மருத்துவர் வஸந்த் ஆகியோரின் தொடர் முயற்சிகளுக்குப் பின்னார் நோயாளி தொற்றிலிருந்து தேறிவந்தார்.
இறுதி முக்கியக் கட்டமாக கழுத்தெலும்பு முறிவுக்கான சிகிச்சை மரு. மயிலன் சின்னப்பன் மற்றும் மரு. கெவின் ஜோசப் முன்னெடுப்பில் வெற்றிகரமாக நிகழ்ந்தேறி நோயாளி ஆறுவாரங்களுக்குப் பிறகு உட்காரவைக்கப்பட்டார். அத்தனை அறுவை சிகிச்சைகளுக்குமான மயக்க மருந்திடும் பணியை மரு.கார்த்திக், மரு.அழகப்பன் மற்றும் மரு.சரவணன் மேற்கொண்டார்கள். மரணத்தின் வாசற்படி வரை பலமுறை போனவரை ஒவ்வொருமுறையும் மீட்டெடுத்து, கடும் போராட்டத்தின் முடிவில் மருத்துவர் அணியின் கூட்டுமுயற்சியால் இன்று விஜயக்குமாருக்கு கிட்டத்தட்ட ஒரு மறுவாழ்வே கிடைத்திருக்கிறது.
“அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் அவசர சிகிச்சைக்கான வசதிகள் அனைத்தும் துரிதநிலையில் மேற்கொள்ளப்படுகிறது, மேலும் அவரச சிகிச்சைக்கு பிரத்தியேகமாக 1066 என்ற தொலைபேசி எண்ணை எந்த வேளையிலும் தொடர்பு கொள்ளலாம். சாலை விபத்துகள், இருதய அவசரநிலைகள், பக்கவாதம் அல்லது விஷம் போன்ற எந்தவொரு அவசர நிலையையும் கையாளுவதற்கு போதுமான படுக்கை கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அவசரகால சேவையானது 24 மணி நேரமும் கிடைக்கும் என்று திருச்சி அப்போலோ மருத்துவமனை நிலைய தலைவர் சாமுவேல் தெரிவித்தார்.
திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவ அதிகாரி மரு.சிவம், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு பொதுமேலாளர் கே. மணிகண்டன், துணை பொது மேலாளர் சங்கீத் உடன் இருந்தனர்.

Spread the love